வீதிகளில் திரிந்த கால்நடைகள் பிடிப்பு: மாந்தை மேற்கு பிரதேச சபை அறிவிப்பு

வட்டக்கண்டலில் வீதிகளிலும் பொது இடங்களிலும் திரிந்த கால்நடைகளைப் பிடித்துள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபை தெரிவித்துள்ளது. பாதுகாப்பான பராமரிப்புக்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கண்டல் பகுதியில் வீதிகளிலும் பொது இடங்களிலும் கட்டாக்காலியாகத் திரிந்த கால்நடைகளைப் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கால்நடை வளர்ப்போர் தமது மாடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் பராமரித்து, வீதிகளிலும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் திரியவிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வீதி விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் கால்நடைகள் திரிவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைப்பதாகச் சபையின் எழுத்துமூல அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான கால்நடைகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடுவிப்புக் கட்டணங்கள்:

பெரிய மாடு ஒன்று — ரூ.3,500

சிறிய மாடு ஒன்று — ரூ.2,500

ஆடு ஒன்று — ரூ.2,000

பராமரிப்புச் செலவு — ரூ.500

உரிமை கோரப்படாத கால்நடைகள் மூன்று நாட்களில் ஏலத்தில் விடப்படும் எனவும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்நடைகளை உரிய முறையில் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வீதி விபத்துகளைத் தவிர்க்கவும் உரிமையாளர்கள் ஒத்துழைக்குமாறு மாந்தை மேற்கு பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது.