வேலைவாய்ப்பா, மோசடி வலையா? BPO வேலைக்கு முன் கவனிக்க வேண்டியவை

போலி வேலைவாய்ப்புகள் மூலம் மோசடி வலையில் சிக்காமல் இருக்க நிறுவனத்தின் செயல்பாடு, பணிப் பொறுப்பு மற்றும் பணப் பரிமாற்றக் கோரிக்கைகளைச் சரிபார்ப்பது அவசியம்.

அதிக சம்பளம், உடனடி நியமனம், இணையம் மூலம் எளிதான வருமானம் போன்ற வாக்குறுதிகளுடன் வரும் வேலைவாய்ப்புகளை ஏற்கும் முன், நிறுவனத்தின் உண்மையான செயல்பாட்டைச் சரிபார்ப்பது அவசியம்.

இலங்கையில் கண்டறியப்பட்ட பாரிய மோசடி அழைப்பு மையங்களில், தவறாக வழிநடத்தும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் உள்ளூர் பணியாளர்கள் சேர்க்கப்பட்டமை நிதிப் புலனாய்வு எச்சரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BPO என்ற பெயர் மட்டும் மோசடிக்கான அடையாளமல்ல. பணிகள் பிரிக்கப்பட்டிருப்பது, தினசரி இலக்கு வழங்கப்படுவது அல்லது வாடிக்கையாளர் தகவல்கள் ரகசியமாகப் பேணப்படுவது ஆகியவற்றை மட்டும் வைத்து ஒரு நிறுவனத்தை மோசடி நிறுவனம் என்று முடிவு செய்ய முடியாது.

போலியான பெயர் அல்லது அடையாளத்தில் மற்றவர்களைத் தொடர்புகொள்ளுதல், உண்மையற்ற வேலைவாய்ப்பு அல்லது முதலீட்டு இலாப வாக்குறுதிகளைக் கூறிப் பணம் செலுத்தத் தூண்டுதல் போன்ற செயல்களைச் செய்யுமாறு கோரப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

நிறுவனப் பணப் பரிமாற்றத்திற்காக உங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதி கோருதல், வங்கிக் கடவுச்சொல், PIN அல்லது OTP போன்ற இரகசியத் தகவல்களை வழங்குமாறு அல்லது பிறரிடமிருந்து பெறுமாறு கூறுதல் ஆகியவற்றையும் அலட்சியம் செய்யக்கூடாது.

இணைய வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மூலம் நிதி மோசடிகள் நடைபெறுவதாக இலங்கைப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். தெரியாதவர்களுக்குப் பணம் அனுப்புதல், தனிப்பட்ட வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தல், OTP மற்றும் கடவுச்சொற்களைப் பகிர்தல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

வேலையில் சேரும் முன் நிறுவனத்தின் சட்டப்பூர்வப் பெயர், முகவரி, வழங்கும் சேவை, உங்கள் பணிப் பொறுப்பு, சம்பளம் மற்றும் வேலை ஒப்பந்தத்தைத் தெளிவாகக் கேட்டறியுங்கள். வேலைவாய்ப்பு விளம்பரத்தில் உள்ள தொடர்பை மட்டும் நம்பாமல், நிறுவனத்தின் அதிகாரபூர்வத் தொடர்பு வழியாகவும் நியமனத்தை உறுதிப்படுத்துங்கள்.

ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் சந்தேகம் ஏற்பட்டால், சந்தேகமான பணப் பரிமாற்றங்களில் ஈடுபடுவதை நிறுத்தி, உங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விளம்பரம், ஒப்பந்தம் மற்றும் தொடர்பாடல் பதிவுகளைப் பாதுகாத்து பொலிஸாரிடம் தெரிவியுங்கள். வங்கித் தகவல் பகிரப்பட்டிருந்தால் உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்.

அதிக சம்பள வாக்குறுதியை மட்டும் நம்பாதீர்கள்; நீங்கள் செய்யப்போகும் வேலை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.