நானாட்டான் பேருந்து நிலையத்தில் மாடுகளால் அசுத்தம்: சுத்தப்படுத்தும் நடவடிக்கை

நானாட்டான் பேருந்து நிலையத்தைப் பிரதேச சபை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வளாகத்தைத் தூய்மையாகப் பேணப் பொதுமக்களும் மாட்டு உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பேருந்து நிலையத்தில் மாடுகளால் ஏற்படும் அசுத்தம் காரணமாகப் பயணிகளும் பொதுமக்களும் சுகாதாரச் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதேச சபை ஊழியர்கள் பேருந்து நிலைய வளாகத்தைத் தண்ணீரால் கழுவிச் சுத்தப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாட்டு உரிமையாளர்களுக்குப் பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும் இந்நிலை தொடர்வதாகவும், தவிசாளரின் நடவடிக்கையைத் தொடர்ந்து சுகாதாரப் பிரிவு மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் பல தடவைகள் சுத்தப்படுத்தப்பட்டாலும் மீண்டும் அசுத்தமாகும் நிலை ஏற்படுவதாகவும், அனைத்துப் பணிகளையும் சபை ஊழியர்களே மேற்கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையைத் தவிர்த்துப் பொதுமக்களும் வியாபார நிலைய உரிமையாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை உரிய கழிவுத் தொட்டிகளில் இடுவதுடன், பேருந்து நிலையத்தைத் தூய்மையாகப் பேண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.