மன்னாரில் ஐந்து கிராமங்களின் அடிப்படைப் பிரச்சினைகள்: நகரசபைத் தவிசாளரிடம் காணொளித் தொகுப்பு கையளிப்பு

பள்ளிமுனை, உப்புக்குளம், சாந்திபுரம், ஜிம்றோன் நகர் மற்றும் ஜீவபுரம் மக்களின் கருத்துகள் அடங்கிய காணொளியை நேசக்கரம் பிரஜைகள் குழு கையளித்துள்ளது.

மன்னார் நகரசபைக்குட்பட்ட பள்ளிமுனை, உப்புக்குளம், சாந்திபுரம், ஜிம்றோன் நகர் மற்றும் ஜீவபுரம் ஆகிய ஐந்து கிராமங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் அடங்கிய காணொளித் தொகுப்பு, வியாழக்கிழமை (05.11.2026) மன்னார் நகரசபைத் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நேசக்கரம் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் இக்காணொளித் தொகுப்பைக் கையளித்துள்ளனர்.

வீதி விளக்குகள் தொடர்பான குறைபாடுகள், வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்றல், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வீடுகளுக்குச் செல்லும் அணுகுபாதைகள் உரிய அளவில் விரிவுபடுத்தப்படாததால், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமங்கள் தொடர்பாகவும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மக்களிடமிருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்ட இக்கருத்துகள் காணொளியாகத் தொகுக்கப்பட்டு, குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகரசபைத் தவிசாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.